கம்பனின் கட்டுகதைகள்


கம்பனைப் பற்றிய பல கட்டுக்கதைகள் உண்டு. அவற்றிலிருந்து சில உண்மைகள் நமக்குத் தெரியவருகின்றன. அவையாவன: அவன் தகப்பன் பெயர் ஆதித்தன்; பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் ஆகும். சாதியால் உவச்சன்; எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. புதுவையில் திரிகார்த்த சிற்றரசனாக விளங்கிய சரராமன் என்ற சடையப்ப வள்ளலால் பாராட்டப்படும் வாய்ப்பு கம்பனுக்கு தன் இளமையிலேயே ஏற்பட்டது. இந்த வள்ளல் பெயர் விக்கிரம சோழன் உலாவிலும்,
மூவலூரிலும் திருக்கோடிக் காவலிலும்(ஆண்டு குறிப்பிடாமல் உள்ள)கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இவன் கங்க வமிசத்து சேதிரையன் என்று இக்கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கம்பனை அவன் காலத்துச் சோழ அரசனும் பாராட்டி அவனுக்கு கம்பநாடு என்று பெயரிடப்பட்ட பெருவாரியான நிலத்தை அன்பளித்தான்; கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் சோழ அரசனே அவனுக்கு வழங்கினான்.
அவன் இராமாயணத்தை எழுதினான், அந்தக் காவியத்தில் அதன் கருப்பொருளில் அவனுக்கு இருந்த பக்தி அளவு கடந்தது. அதனாலேயே இதைத் தமிழில் எழுத முன்வந்தான். இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பி வந்து முடிசூட்டிக் கொள்ளும் வரை மட்டுமே கம்பன் எழுதியது எனினும், உத்தர காண்டம், ஒட்டக்கூத்தனாலோ அல்லது வாணிதாசன் என்ற வாணியன் தாதன் என்பவனாலோ எழுதப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிக் கூறப்படும் விவரங்கள் அவ்வளவு நம்பகத்தக்கவை அல்ல. திருவொற்றியூரில் சதுரானன பண்டிதருடைய சைவமடத்தில் வள்ளி என்ற தாசியைச் சந்தித்து அவள் மீது கம்பன் காதல் கொண்டானாம். வள்ளியின்பால் கம்பன் கொண்ட காதலையும் அவனைக் காதலிக்கும் மற்றொருத்தியிடம் அவனுக்கு ஈடுபாடு இல்லாததையும் "தமிழ் நாவலர் சரிதை"யில் சில செய்யுள்கள் தெரிவிக்கின்றன. பாண்டியன், காகதிய ருத்திரன் உட்பட்ட தன் காலத்திய அரசர்கள் எல்லோராலும் கம்பன் பாராட்டப் பெற்றான். இவனுடைய பெரும் புகழ்க்கண்டு சோழ அரசனே பொறாமையடைந்து, இவனை கொன்றுவிட சதி செய்ததாகவும், தானே இருந்து அவனைக் கொலை செய்ததாகவும் கட்டுக்கதைகள் உண்டு. இவற்றை சரிபார்க்க ஆதாரங்கள் இல்லை.

No comments:

Post a Comment