கம்பர்
இராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர்
கம்பன். தமிழ் இலக்கியத்தில் கம்பர்
இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம். வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும்,
கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு
ஆகாது; அதன் தழுவலும் இல்லை;
கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப்
படைக்கும் முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை
வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான். ஆழமான கவிதை அனுபவத்தையும்
புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின்
கைவண்ணமாகப் பார்க்கிறோம்.
எத்தனையோ
பெரும் புலவர்கள் இந்திய மொழிகளையும் கீழைநாட்டு
மொழிகளையும் இராம கதை எழுதிப்
பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய
கதையில், அதன் வருணனையில் தன்
காலத்து நிகழ்ச்சிகளையும் தான் வாழும் தமிழ்நாட்டின்
சாயலையும் இடையிடையே புகுத்துகிறான் அல்லது படம் பிடித்துக்
காட்டுகிறான். எனவே அவன் காட்டும்
கோசலநாடு சோழநாடே என்று கூறலாம்.
நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு
வழங்கிய வள்ளலான திருவெண்ணெய் நல்லூர்
சடையப்ப வள்ளலின் புகழ் போல, நிலவின்
ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று
சொல்லி தன் வாசகர்களைக் கம்பன்,
காந்தம் போல தன்பாலும் தன்னைப்
புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான். சமஸ்கிருத
மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ
அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும்
சொல்வன்மை(நாவன்மை) பெற்றிருந்தான்.
சில சமயம், கம்பனும் ஏனைய
தமிழ்ப்புலவர்கள் போல, பாவியல் மரபில்
சிக்கிக் கொள்கிறான்; அவற்றின் போக்குக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். சான்று: மிதிலைக்கு இராமன்
வந்தவுடன் எதிர்பாராத விதமாக இராமனும் சீதையும்
சந்தித்துவிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை,
மிக விரிவாக விவரிக்கிறான். இராமனுடைய
மோதிரத்தை அநுமான், சீதையிடம் கொடுத்த பொழுது சீதைக்கு
இருந்த உணர்ச்சிகளையும் கம்பன் விவரிக்கிறான்; கணவனுடன்
மீண்டும் கூடி விட்டது போலச்
சீதை நினைத்து மகிழ்ந்தாள் என்று மட்டும் வால்மீகி
சொல்லியிருக்கிறான். கம்பன் அதோடு நிறுத்தவில்லை,
அதை இன்னும் விரிவாகக் கூறுகிறான்.
ஆனால், தசரதனுடைய அசுவமேதயாகம் முதலியவற்றை வால்மீகி சொல்வதைவிடச் சுருக்கமாகவே கம்பன் தெரிவிக்கிறான்.